பெரம்பலூர் மாவட்டம்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவனின் உயர்கல்விக்கு உதவிய பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப. அவர்கள் – மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நெகழ்ச்சி சம்பவம்.
பெரம்பலூர் மாவட்டம்
பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவனின் உயர்கல்விக்கு உதவிய பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப. அவர்கள் – மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நெகழ்ச்சி சம்பவம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.07.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களைப்பெற்றுக்கொண்டார்.
வேப்பந்தட்டை ஒன்றியம், நெய்க்குப்பை கிராமத்தில் வசிக்கும் ராஜகுமாரி என்பவரின் மகன் சஞ்சய் என்பவர் 14.07.2025 அன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது உயர்கல்விக்கு உதவிகோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
கண்பார்வையற்ற சூழலிலும் உயர்கல்வி பயிலவேண்டும் என்ற மாணவன் சஞ்சயின் ஆர்வைத்தைப் பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நிச்சயம் உங்கள் உயர்கல்விக்கு உதவிசெய்வதாக உறுதியளித்தார். அதன்படி இன்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சஞ்சய்க்கு ரோவர் கல்லூரியில் உயர்கல்வி பயில்வதற்காக இலவசமாக இடம்பெற்றுதந்து அதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்.
மன நெகிழ்வோடு இந்த ஆணையினைப் பெற்றுக்கொண்ட கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவன் சஞ்சய் கண்ணீர்மல்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், எனது உடன்பிறந்த சகோதரன் மற்றும் சகோதரி என நாங்கள் மூவரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இந்நிலையில் எனது உயர்கல்விக்கு உதவிடவேண்டுமென்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த ஒரே வாரத்தில் எனக்கு இலவசமாக தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு தமிழ் பாடப்பிரிவில் படிப்பதற்கு இடம் பெற்று தந்தார். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்குவதும் என்னைப்போன்ற ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது உயர்கல்விக்கனவை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
பின்னர் மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 426 மனுக்கள் பெறப்பட்டது.
முன்னதாக வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 18 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சொர்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வாசுதேவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


