பெரம்பலூர் மாவட்டம்போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1,008 பயனாளிகளுக்கு ரூ.9.40 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான விருதுகளையும் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் நடத்தப்பட்ட 72 வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 1,008 பயனாளிகளுக்கு டாம்கோ கடன், பயிர் கடன், விவசாய நகைக் கடன், மகளிர் சுய உதவிக் குழுக் கடன் உள்ளிட்ட ரூ.9.40 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான விருதுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., தலைமையில் கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பேசியதாவது:
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டங்களை நமது தமிழ்நாட்டில் செயல்படுத்தி, மற்ற மாநில முதலமைச்சர்களும் பின்பற்றும் முதலமைச்சராக, அனைவருக்கும் எடுத்துக்காட்டான முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார்கள்.
இந்தியாவிலேயே சிறந்த பொது போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான தேசிய விருது ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் செயல்படுத்தப்படும் மகளிர் விடியல் பயணம் திட்டத்தை மற்ற மாநில முதலமைச்சர்களும், அமைச்சர்களும் ஆர்வமுடன் கேட்டு, எப்படி உங்கள் மாநிலத்தில் மட்டும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது என ஆச்சரியத்துடன் கேட்டு மகிழ்கின்றார்கள். அந்த அளவிற்கு நமது மாநிலத்தில் அரசு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்டுகின்றது.கூட்டுறவுத்துறை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில்தான் செம்மைப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அன்றாடம் அணுகும் துறைகளில் ஒன்றாக கூட்டுறவுத்துறை உள்ளது. இத்துறையின் 72 வது கூட்டுறவு வார விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.48.34 கோடி மதிப்பில் 13,507 நபர்களின் பொது நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2,292 சுய உதவி குழுக்களை சேர்ந்த 24,402 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.49.50 கோடி அளவிலான சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 24,953 விவசாயிகளுக்கு ரூ.234.75 கோடி மதிப்பிலான வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தாங்கள் பெற்ற கடன் மூலம் பொருளாதாரத்தில் வலுவடைந்து கடனைச் செலுத்த ஏதுவாக 490 விவசாயிகளுக்கு ரூ.4.11 கோடி மதிப்பிலான மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. 20,012 நபர்களுக்கு ரூ.173.27 கோடி மதிப்பில் நகை கடன் வழங்கப்பட்டுள்ளது. 566 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 7,174 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ.65.35 கோடி மதிப்பில் கடனாக வழங்கப்பட்டு, குழு உறுப்பினர்களின் குடும்பங்கள் முன்னேற்றம் அடைந்து குடும்ப பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று வருகின்றனர். பிற்படுத்தப்பட்டோரை மேம்படுத்தும் வண்ணம் டாப்செட்கோ திட்டத்தின் கீழ் 729 நபர்களுக்கு ரூ.451.35 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரை மேம்படுத்தும் பொருட்டு டாம்கோ திட்டத்தின் கீழ் 79 நபர்களுக்கு ரூ.38.21 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக நடப்பாண்டில் அக்டோபர் 2025 முடிய 24,953 விவசாயிகளுக்கு ரூ.22.54 கோடி மதிப்புள்ள 9698.93 டன் உர விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் நோக்கில் முதல்வர் மருந்தகம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 17 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்பட்டு தற்போது வரை ரூ.26.91 லட்சம் மதிப்பிலான மருந்துகள் 25% வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 43,671 பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 2025ல் 13,420 பயனாளிகளுக்கும், செப்டம்பர் 2025ல் மாதம் 11,659 பயனாளிகளுக்கும், அக்டோபர் மாதம் 16,153 பயனாளிகளுக்கும் இல்லம் தேடி பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் உன்னத திட்டமான முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 2025-இல் 13,420 பயனாளிகளுக்கும், செப்டம்பர் 2025 மாதம் 11659 பயனாளிகளுக்கும், அக்டோபர் மாதம் 2025 மாதம் 16,153 பயனாளிகளுக்கும் இல்லம் தேடி பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அன்புச்சோலை திட்டம் எண்ணற்ற முதியவர்கள் இளைப்பாறும் இடமாக மாறி அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி அனைத்து தரப்பு மக்களுக்குமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் கூட்டுறவுத் துறையின் சார்பில் 1,008 பயனாளிகளுக்கு டாம்கோ கடன், பயிர் கடன், விவசாய நகை கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட ரூ.9,40,85,800 மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட அளவில் சிறந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கும், சிறந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், அனைத்து வகை கடன்களையும் தவணை தவறாமல் 100% முழுமையாக வசூல் செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், அதிக அளவில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், அதிக அளவில் பயிர் கடன் வழங்கிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், அதிக அளவில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்ற சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் நினைவு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிய போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும், கேடயங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க பாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் மு.அனிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ந. சக்திவேல், பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன், நகர் மன்ற உறுப்பினர் நல்லுசாமி துணை பதிவாளர்கள் அ.இளஞ்செல்வி,. சிவக்குமார், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி மன்றத் தலைவர் அ.சு. ஜாகீர் உசேன், துணைப் பதிவாளர் (பயிற்சி) ஜெகன், திருச்சிராப்பள்ளி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் .ஆர்.சிவசங்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், சங்க செயலாளர்கள் பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


