இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டுஜோதிமாணிக்கம் உலக வாழும் பாரம்பரிய கிராமத்தைப் பாதுகாக்க உறுதிமொழி:

இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்க கிராமத்தில் மக்கள் அனைவரும் ஜோதிமாணிக்க கிராமத்தை ஒரு உலக வாழும் பாரம்பரிய கிராமமாக பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 2001 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அறிஞர் ஸ்பென்சர் வெல் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக் கழக அறிஞர் பிச்சையப்பன் ஆகியோர் ஜோதிமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த விருமாண்டியின் இரத்த மாதிரியில் CM130 என்ற ஆண்வழி மரபணு குறீயிடு இருப்பதாகவும், அது 70000 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த முதல் நவீன மனித இனக் கூட்டத்தைச் சார்ந்தது என்றும் கண்டறிந்ததனர். அக்குழு அதே ஆண்டு ஜோதிமாணிக்கம் கிராமத்தில் பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சார்ந்த 13 ஆண்வழி குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் சோதனை செய்ததில் அனைவரும் அதே CM130 ஆண்வழி மரபணு குறீயிட்டை சுமந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதைக் கண்டறிந்தனர். இப்பெரும் அறிவியல் உண்மையைக் கண்டறிந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்தும் மத்திய, மாநில, சர்வதேச அமைப்புக்கள் அதை அங்கீகரித்து பாதுகாக்க எந்த உரிய முயற்சியும் செய்யவில்லை. ஐக்கியநாடுகள் சபையின் யுனஸ்கோ நிறுவனம் இந்த ஆண்டு உலக பாரம்பரிய தினத்தில், வாழும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வலியுறுத்துகிறது. எனவே இக்கிராம மக்கள் உலக பாரம்பரிய தினத்தைக் கொண்டாடி இந்த 70000 ஆண்டுகள் தொடர்ச்சியாக வாழும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்று உறுதிமொழி எடுத்துக்
கொண்டு இக்கிராமத்தை உலக வாழும் பாரம்பரிய கிராமமாக அங்கீகரிக்க கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர்.
அம்மனுவில் 70000 ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் குடியேறிய நவீன மனித இனம் இங்கு தொடர்ச்சியாக வாழ்ந்தற்கான ஆதாரங்களாக தேனி காமயகவுண்டம்பட்டி, மயிலாடும்பாறை, உசிலை குறிச்சிநகர் பாறை ஓவியங்கள் இந்தோநேசியா மூனாதீவில் இருக்கும் 67800 ஆண்டுகள் பழமையான ஓவியங்களை ஒத்திருக்கின்றன என்றும், கல்லுத்துமலை இராமர் பாதம் அருகில் உள்ள சிவப்பு ஓவியங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள 18000 ஆண்டு பழமையான பாறை ஓவியத்தை ஒத்துள்ளது என்றும். சித்தர்கள் வாழ்வை சித்தரிக்கும் பல ஓவியங்களும் சிவப்பு சாயத்தில் எழுதப்பட்ட பல புராதான தமிழ் எழுத்துக்களும், பல குறியீடுகளும் இருக்கிறது என்றும், இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு, கூட்டுவழிபாடு உள்ளிட்ட புராதான மதக்குறியீடுகள் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்றும். மாந்தீரிக நம்பிக்கையோடு தொடர்புடைய உப்பில் காலைவைத்து தாலி கட்டுவது, கர்ப்பிணி பெண்களுக்கு சங்கு வளையல்கள் அணிவிப்பது, மருந்துக்களி கொடுத்தல், பல விதமான ஈமச்சடங்குகள் என்று பிறப்புமுதல் இறப்புவரை உழுவது முதல் அழுவது வரை பல வாழ்வியல் இலக்கணங்களை வகுத்து அவற்றை இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றனர் என்றும், வேட்டையாடுவதற்கு முன்பே உணவு சேகரிக்கும் காலத்திலேயே உணவைச் சேமிக்கும் பல முறைகளை உருவாக்கியுள்ளனர். சக்கரத்தால் உருவாக்கப்பட்ட மண்பாண்டங்கள் உருவாவதற்கு முன்பே கையால் செய்யப்பட்ட பல அளவுகளுடைய குலுக்கைகள் இன்றும் தொடர்ச்சியாக பயன்பாட்டில் இருந்துவருகிறது என்றும், ஆஸ்திரேலிய பழங்குடிகளிடத்தில் இன்றும் இருந்துவரும் வளரி ஆயுதம் ஆங்கிலேயர் காலம்வரை இம்மக்களின் பயன்பாட்டில் இருந்து இன்று வழிபாட்டு ஆயுதமாக மாறியுள்ளது என்றும், அப்பத்தா, ஆத்தா, அப்பன், அண்ணன், அக்கா, கொழுந்தியா, கொழுந்தனார், நாத்தனார், கிளை, கொத்து என்று தமிழின் பல வேர்ச்சொற்களை இன்றும் முழு உயிர்ப்புடன் பழக்கத்தில் பயன்படுத்தி வருகின்றனர் என்றும், பழமையான ஊர், நாடு கட்டமைப்புக்களும் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவ அடிப்படையில் சுழற்சி முறையில் தேர்வுசெய்யும் முறைகளும், கூட்டு ஒருமித்த முடிவெடுக்கும் முறையும், மந்தைப் பஞ்சாயத்து, புறப் பஞ்சாயத்து, சாட்சிகள் விசாரணை, வழக்கை ஒத்திவைத்தல், அறிவுரை வழங்குதல், பதிக்கப்பட்டோருக்கு உடனடி இழப்பீடு, குற்றத்திற்கு தகுந்தார்போல் இழப்பீடு வரையறை, மேல்முறையீடு, பெண்களுக்கு விவாகரத்து உரிமை, மறுமணம் பல பண்பட்ட வாழ்வியல் விழுமியங்கள், ஒவ்வொரு ஊரிலும் அக புற திணை ஒழுக்கங்கள் என்று எண்ணற்ற அகபுறச்சான்றுகள் உதாரணமாக இந்தியாவின் முதல் கல்வெட்டு எழுத்தாக கருதப்படும் புள்ளிமான்கோம்பை ஆகோல் நடுகல், கீழக்குயில்குடி, பெருமாள்கோவில்மலை, புளியங்குளம், திடியன், புத்தூர் மலைகளில் காணப்படும் தமிழி கல்வெட்டுக்கள் போன்ற பல சான்றுகள் இம்மக்களின் வாழ்விட பகுதிகளில் கிடைக்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.
தொல்லியல் அகழாய்வின் மூலம் கண்டறியப்பட்ட சில ஆயிரம் ஆண்டுகள் பழமையான மெசப்படோமிய, எகிப்த்திய, சிந்து சமவெளி, சிவகளை, கீழடி நகர நாகரீகங்களை கொண்டாடும் வேளையில் நிறத்தால், நிலத்தால், மொழியால், மதத்தால் மாந்தர்கள் மாறுபட்டு இருந்தாலும் ‘உலகம் ஒன்றே’ என்று உரக்கச்சொல்லும் உலக மதிப்புமிக்க மரபணு அறிவியல் உண்மையை போற்றி பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். உலக பாரம்பரிய ஒப்பந்தம் 1972யை செயல்படுத்த வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி 10 நிபந்தனைகளில் ஏதாவது ஒரு நிபந்தனைக்குள் இருந்தால் அதை உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கலாம். ஜோதிமாணிக்கம் கிராமம் நிபந்தனைகள் 3, 5, 6, 9 மற்றும்10 ஆகிய கலாச்சார இயற்கை நிபந்தனைகளுக்குள் வருவதால் இக்கிராமத்தை உலக பாரம்பரிய இடமாக அறிவிப்பது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தொல் மரபணு கிராமம் இன அடிப்படையிலான பாகுபாடுகளும் அதனால் ஏற்படும் சமூக மோதல்களும் அர்த்தமற்றது என்றும் மானுட சமூகங்கள் அனைத்தும் ஒருதாய் பிள்ளைகள் என்றும் ஒரே வம்சாவழியினரே என்றும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தமிழர் கொள்கைக்குச் சான்றாகவும் மொழி, மத, கலாச்சார வேறுபாடுகள் காலத்தாலும் சமூக, புவிச் சூழலாலும் வேறுபட்டுள்ளது என்ற ஒரு உலக பேருண்மையை வலியுறுத்தி நிற்பதால் அக்கிராமத்தையும் அவர்களின் தொடர்ச்சியான வாழும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க அக்கிராமத்தை உலக பாரம்பரிய கிராமமாக அங்கீகரிக்க கோரியுள்ளனர்.
ஜோதிமாணிக்க கிராம மக்கள்.
