பெரம்பலூர் மாவட்டம்அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE பயிற்சி புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கி தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழு சார்பில், வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE தேர்வு குறித்த பயிற்சி புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இன்று (22.07.2025) வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர், உயர்கல்வி மற்றும் 12ஆம் வகுப்பு பாடப்பிரிவுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில திட்டக்குழு அறிவுறுத்தலின்படி, வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டாரங்கள் வளமிகு வட்டாரங்களாக மாற்றிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களில் மருத்துவம், வேலைவாய்ப்பு, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளும், நலத்திட்ட பணிகளும் வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழு இணைந்து, வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு NEET, JEE தேர்வுகளுக்கான பயிற்சி புத்தகங்களை வழங்கும் விதமாக, வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 151 மாணவமாணவியர்களுக்கு NEET, JEE தேர்வுகளுக்கான பயிற்சி புத்தகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் இன்று வழங்கி தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டாரத்திலுள்ள 13 அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகம் ஒன்று ரூ.3,485 வீதம் 114 இணை NEET புத்தகங்களும், புத்தகம் ஒன்று ரூ.3,520 வீதம் 91 இணை JEE புத்தகங்கள் என மொத்தம் ரூ.7,17,610 மதிப்பீட்டிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 8 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு புத்தகம் ஒன்று ரூ.3,485 வீதம் 109 இணை NEET புத்தகங்களும், புத்தகம் ஒன்று ரூ.3,520 வீதம் 96 இணை JEE புத்தகங்கள் என மொத்தம் ரூ.7,17,785 மதிப்பீட்டில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 2,082 மாணவர்களும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 1,062 மாணவ மாணவியர்களும் பயனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் வாலிகண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமை இயக்கம் மாணவர் பிரிவை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுடன் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் நட்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) திரு. செல்வக்குமார், வேப்பந்தட்டை வட்டாட்சியர் திரு.துரைராஜ், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்