டென் ஹவர்ஸ் – ஓர் இரவு. காவல் நிலையம். மூன்று குற்றங்கள் என வந்திருக்கும் இன்னொரு படம்…

டென் ஹவர்ஸ் – ஓர் இரவு. காவல் நிலையம். மூன்று குற்றங்கள் என வந்திருக்கும் இன்னொரு படம்.

வீட்டிலிருந்து கோச்சிங் கிளாஸிற்கு சென்ற பெண் காணாமல் போகிறாள். சென்னை கோயம்பேட்டிலிருந்து கோவைக்குச் சென்று கொண்டிருக்கும் ஒரு பேருந்தில் ஒரு பெண்ணைத் துன்புறுத்துகிறார்கள் எனக் காவல்துறைக்கு ஒரு புகார் வருகிறது, அதே நேரம் இன்னொரு ஆம்னி பேருந்தில் ஓர் இளைஞர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். யார் கொன்றது என்பது குறித்து அதில் பயணம் செய்த ஒருவருக்கும் தெரியவில்லை. இந்த மூன்று சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. இதைக் கண்டுபிடித்தே தீருவேன் என்று கிளம்புகிறார் ஆத்தூரில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் கேஸ்ட்ரோ (சிபிராஜ்). என்ன ஆனது என்பது தான் டென் ஹவர்ஸ் படத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்தில் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி போன்றோருக்கெல்லாம் நன்றி என்று போடுகிறார்கள். ஆமாம் இதுவும் ஓர் இரவில் அதுவும் சாலையிலும் காவல்நிலையத்திலும் நடக்கும் கதை. ஒரு கிரைம் திரில்லர் அல்லது மர்டர் மிஸ்டரி என்ற ஜானரில் எடுக்க வேண்டும் என்று நினைத்து இறங்கியிருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள். அதில் வெற்றி பெற்றாரா பார்க்கலாம்.

இது போன்ற கதைகளில் பலர் மேல் சந்தேகம் வரும். பின்னர் அந்த முடிச்சு ஒவ்வொன்றாக அவிழ்ந்து கடைசியில் குற்றவாளி இவர் தானெனத் தெரிய வரும். ஆனால் இதில் பெண் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொலையென மூன்று அம்சங்களையும் இவர் கொண்டு வர வேண்டும். மூன்றும் இணையும் புள்ளியில் குற்றவாளி வெளிப்பட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். படமும் முதல் காட்சியில் இருந்தே கதைக்குள் சென்று விடுகிறது. சின்ன சின்ன க்ளூக்களை வைத்துக் கொண்டே துப்பறிந்து வருகிறார் சிபிராஜ். கம்பளிப்பூச்சி, உடைந்து போன பல்புகள், சரடுகள் என வெகுசுலபமாக நெருங்க ஆரம்பிக்கிறார். ஆனால் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வரச் சோர்வடைகிறார்.

இவர் தானா இல்லை. இவர் தான். இல்லையில்லை இவர் தானென அடுத்தடுத்து கண்ணாமூச்சி ஆடுகிறது திரைக்கதை. ஆனால் ஒருகட்டத்தில் நமக்குச் சற்று பொறுமை போய்விடுகிறது. எல்லாம் முடிந்து கடைசியில் இதற்குத்தானென இறுதி முடிச்சு அவிழும்பொழுது ஆச்சரியத்திற்கு பதில் நமக்குச் சப்பென்றாகிவிடுகிறது. இந்தத் திரைக்கதை சற்று பின்னோக்கிச் செல்வது இந்தக் கிளைமாக்சில் தான். வில்லனின் அறிமுகமும் இந்தக் குற்றங்களுக்கு அவர்கள் சொல்லும் காரணமும் இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சிறுபிள்ளைத் தனமாகவா கையாளுவார்கள். என்ன வில்லனோ என்று தோன்றுகிறது.

நாயகனாகச் சிபிராஜ். திரையில் இவரைப் பார்த்துப் பல வருடங்களானதால் சற்று வித்தியாசமாக இருக்கிறது. ஷெர்லாக் ஹோம்ஸ் போலத் துப்பறிவதெல்லாம் சரி. ஆனால் முக்கியமான தருணங்களில் தனியாகத் தான் செல்வேன். அந்த இடங்களிலெல்லாம் ஒரு சண்டைக்காட்சி இருக்க வேண்டும் என்று இயக்குநர் நினைத்தது தான் தவறு. ஆக்க்ஷன் மோடுக்குப் படம் மாறும்போதெல்லாம் கவனமும் மாறுகிறது. சண்டைக்காட்சிகள் ஓகேவாக இருந்தால் கூட மிகவும் வசதியாக அமைத்திருக்கிறார்களோ என்ற எண்ணம் வருகிறது. அவ்வளவு பெரிய மாஸ்டர் பிளான் போடும் வில்லன் இவருக்காகக் காத்திருந்து சண்டை போடுவதெல்லாம் ஒட்டவே இல்லை.

ஏற்கனவே ஆம்னி பஸ் உரிமையாளர்களும், டிரைவர்களும் நடந்து கொள்ளும் விதங்கள்குறித்து மக்களுக்குப் பெரிய அபிப்பிராயமில்லை. இந்தப் படத்தில் நடப்பது போலவும் நடக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தால் அவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம். ஓர் இரவில் அதுவும் ஹைவேயில் நடக்கும் கதைக்களன் என்பதால் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமன் தன்னால் இயன்ற அளவு காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறார். இரண்டு பேருந்துகள் ஒன்றையொன்று முந்தும் காட்சி, ட்ரான் ஷாட்களில் படம் பிடிக்கப்பட்டுள்ள துரத்தல்கள் இவர் உழைப்புக்குச் சான்று. இந்தக் காட்சிகளில் எடிட்டர் லாரன்ஸ் கிஷோரின் பங்கும் குறிப்பிடத் தக்கது. இது ஒரு பரபரப்பான திரைக்கதை. இசை அதே வேகத்தில் இருக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியிடம் சொல்லி விட்டது தான் தாமதம். வாசித்துத் தள்ளியிருக்கிறார் மனிதர். சில இடங்களில் பொருந்தி வந்தாலும் படம் முழுதும் இப்படியா. சில இடங்களில் அமைதியாக இருக்க வேண்டிய தேவை இருந்தாலும் அங்கும் ஏதாவது இசையை நிரப்பியிருக்கிறார். பாடல் எதுவும் இல்லை

தொடர்புடைய செய்திகள்