நாங்கள் என்றும் மக்களோடு இருப்போம்: மு.க.ஸ்டாலின்
அரியலூர்: தமிழர்கள் மனதில் தமது பெயர் என்றுமே நிலைத்திருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டத்தால் தனக்கு சத்தான உணவு கிடைத்திருப்பதாக இன்றைய குழந்தைகள் நாளை கூற வேண்டும் என்பதே தமது விருப்பம் என்று அரியலூரில் நடைபெற்ற விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்கள் மூலம் நானும் என் குடும்பமும் முன்னேற, மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும். நிச்சயம் சொல்வார்கள்.
“அவர்களின் வாழ்த்துகளிலும் அன்பிலும்தான் இந்த ஸ்டாலின் பெயர் தமிழர்களின் மனதில் என்றும் நிறைந்திருக்கும்,” என்றார் முதல்வர்.
எதிர்காலத்திலும் தொடரப்போகும் இந்தத் திட்டங்களால், வரலாற்றில் திராவிட மாடல் அரசும், அதை வழிநடத்தும் இந்த ஸ்டாலின் பெயரும் அழிக்க முடியாதபடி என்றென்றும் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்ட அவர், திமுக என்றும் மக்களோடு இருக்கும் என்றார்.
“எனவே, திமுக அரசுக்கு என்றும் நீங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி துணை நிற்க வேண்டும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்தில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் மூலம் 18 லட்சம் சிறார்கள் பயனடைவதாக அவர் தெரிவித்தார்