பெரம்பலூர் மாவட்டம்மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,அறிவுறுத்தல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (23.07.2025) நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்,3 மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மற்றும் குறைகளை கேட்டறிந்தார் .இதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு ஊரக பகுதிகளில், நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 100 நாட்கள் பணிகள் வழங்கிட வேண்டும் என்றும் அதற்கான முழு பணித் தொகையும் வழங்கிடவும், இலவச வீட்டுமனைப் பட்டா, தொழிற் கடனுதவிகள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கை தொடர்பாக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்..
பின்னர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 31 மனுக்கள் பெற்றுக்கொண்டு,நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் இன்று 4 பயனாளிகளுக்கு தலா ரூ.3,500 மதிப்பீட்டில் காதொலி கருவியினையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.16,199 மதிப்பீட்டில் திறன் பேசியினையும் என மொத்தம் 6 கண் பார்வை குறைபாடுடைய மற்றும் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.49,898 மதிப்பிலான உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும் 22.08.2025 அன்று முதல் நடைபெறவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வெல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன், தாட்கோ மேலாளர் திரு.கவியரசு, தேசிய சுகாதாரக் குழுமம் உதவி திட்ட அலுவலர் மரு.விவேகானந்தன், உதவி திட்ட மேலாளர் (மகளிர் திட்டம்) திரு.கிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்