சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் .ஆ.ராசா அவர்களும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களும் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் 800 நபர்களுக்கு அடையாள அட்டைகளையும், 96 பயனாளிகளுக்கு ரூ.10,22,760 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் வ.கலையரசி,இ.ஆ.ப., தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி,இ.ஆ.ப., முன்னிலையில் வழங்கினார்கள்.

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்ததாவது:
சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். கல்விதான் அனைவரையும் உயர்த்தும். நான் எனது பெற்றோருக்கு 8 வது மகன். சிறிய குக்கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த நான், கல்வியால், அம்பேத்கரால், தந்தை பெரியாரால், பேரறிஞர் அண்ணாவால், முத்தமிழ் அறிஞர் கலைஞரால் பாராளுமன்ற உறுப்பினராக, ஒன்றிய அரசின் அமைச்சராகவும் இருந்திருக்கின்றேன் என்றால் அது நான் படித்த கல்வியால்தான். இந்தக் கல்வியை இந்த சமூகம் இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை.
உங்கள் குடும்பத்திலிருந்து எத்தனை பேர் அரசு அலுவலர்களாக, மாவட்ட ஆட்சித்தலைவர்களாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களாக உள்ளார்கள் என்பதை சிந்தியுங்கள். சாதி ஒழிய வேண்டும், எல்லோருக்கும் கல்வி வேண்டும், எல்லோருக்கும் வேலைவாய்ப்பு வேண்டும் என்று தந்தை பெரியார் சொல்லியிருக்கின்றார். அருள்கூர்ந்து உங்கள் பிள்ளைகளை படிக்க வையுங்கள். கல்விதான், அதிகாரம்தான் உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றும். ஒரு காலத்தில் அறிவுமட்டும்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்யும் அதை நோக்கி உங்கள் பயணத்தை வைத்துக்கொள்ளுங்கள். அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கிதான் திராவிட மாடல் ஆட்சி வழங்கிவருகின்றது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள், தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இதற்கு வழிவகுத்தார். இன்று அவர்கள் யாரும் உயிரோடு இல்லை. அவர்களின் ஒட்டுமொத்த வடிவமாக திகழ்பவர்தான் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சீர்மரபினர் நல வாரியத்தில் 1 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம். தற்போது வரை சுமார் 97,000 உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். அதில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் இன்று 800 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றது. இன்னும் 6 மாதங்களில் ஒரு லட்சம் உறுப்பினர்களை எட்டும் வகையில் எங்கள் பணி இருக்கும்.கரூர், பெரம்பலூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊராளிக் கவுண்டர்கள் உள்ளார்கள். ஊராளிக்கவுண்டர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து சீர்மரபினராக மாற்றுவதற்கான பெரும் முயற்சி எடுத்தவர் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி, அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேரும் வகையில் நாளுக்கொரு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகின்றார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “அன்புக்கரங்கள்“ என்ற திட்டத்தை தொடங்கினார்கள். பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி மேம்பட மாதம் ரூ.2000 வழங்கும் இந்த உயர்வான திட்டத்தால் எத்தனை குழந்தைகள் பயன் பெறுவார்கள் என நீங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இப்படி ஒரு முதலமைச்சரை பெற்றதற்கு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்.
சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் அரசு நலத்திட்டங்களுக்கு ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர், சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் 800 நபர்களுக்கு அடையாள அட்டைகளையும், 96 பயனாளிகளுக்கு ரூ.10,22,760 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, சிறுபான்மையினர் நல வாரிய துணைத்தலைவர் இராசா அருண்மொழி, உறுப்பினர் செ.கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) வி.வாசுதேவன், நிர்வாக அலுவலர் பா.குணசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.