பெரம்பலூர் மாவட்டம், அருணகிரி மங்கலத்தில் இருந்து அரியலூருக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்…!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அருணகிரி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அருணகிரி மங்கலத்தில் இருந்து அரியலூருக்கு சென்று வர ஏதுவாக புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தார்கள்.

அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூரில் இருந்து ஆலத்தூர் கேட் வரை செல்லும் வகையிலான புதிய வழித்தடப் பேருந்து சேவையினை அருணகிரிமங்கலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி,இ.ஆ.ப., தலைமையில் தொடங்கி வைத்தார்.

இந்தப்பேருந்தானது, தினந்தோறும் காலை 7.55 மணிக்கு அரியலூரில் இருந்து இராமலிங்கபுரம், அருணகிரி மங்கலம், கொளக்காநத்தம் வழியாக ஆலத்தூர் கேட் வரையிலும், காலை 9.15 மணிக்கு ஆலத்தூர் கேட்டில் இருந்து தெரணி, கொளக்காநத்தம், அருணகிரிமங்கலம், ராமலிங்கபுரம் வழியாக அரியலூர் வரையிலும் தினசரி இரண்டு முறை இயக்கப்படும்.

தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் புதிய பேருந்து வழித்தடத்தில் பேருந்தை தொடங்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கு அருணகிரிமங்கல கிராம பொதுமக்கள் அனைவரும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், ஆலத்தூர் முன்னாள் ஒன்றியப்பெருந்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிட் மேலாண்மை இயக்குநர் தசரதன், திருச்சி மண்டல பொதுமேலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்