இடைத்தரகர்கள் இல்லாமல் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, இ.ஆ.ப. உறுதி…!

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளையும், வியாபரிகளையம் நேரில் சந்திக்க வைத்து இடைத்தரகர்கள் இல்லாமல் சின்ன வெங்காயத்தை விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, இ.ஆ.ப., உறுதியளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட செட்டிகுளம் பகுதியில் சின்னவெங்காயம் உற்பத்தி விவசாயிகளின் வயல்களுக்கே சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, இ.ஆப., பார்வையிட்டு ஆய்வு செய்து, சின்ன வெங்காய வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பு கூட்டக்கூடிய இயந்திரங்களை பார்வையிட்டு, சின்ன வெங்காய விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போதுவிவசாயிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது :
“தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யும் மாவட்டம் நமது பெரம்பலூர் மாவட்டம். செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கு தனி சிறப்பு உருவாக்கிடும் வகையில் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்த பகுதிகளில் சின்ன வெங்காயத்தை இடைத்தரகர்கள் மூலம் விற்பதால் உரிய விலை கிடைக்காமல், குறைந்த லாபத்திற்கு விற்க வேண்டிய நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். அந்தக்குறையினை களைந்திடும் வகையில், சின்ன வெங்காயத்தை விளைவிக்கும் விவசாயிகளே வியாபாரிகளிடம் நேரடியாக விற்பனை செய்திட உரியநடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைக்கு சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும். விவசாயிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, ஒருசில நபர்கள் தரும் சொற்ப லாபத்திற்காக இடைத்தரகர்களிடம் வெங்காயத்தை விற்காமல், நேரடியாக வியாபாரிகளிடம் விற்பனை செய்வதில் உறுதியுடன் இருக்க வேண்டும்.
உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. சின்ன வெங்காயத்திற்கான மார்க்கெட்டை பெரம்பலூரில் உருவாக்கிடும் வகையில் நமது முன்னெடுப்புகள் இருக்க வேண்டும். நமது மாநிலத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, பிற மாநிலங்களில் இருந்தும் பெரம்பலூரை நோக்கி வியாபாரிகள் வந்து சின்ன வெங்காயத்தை வாங்கி செல்லும் வகையிலான சூழலை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சின்ன வெங்காயத்தை உலர்த்திடவும், தரம் வாரியாக பிரித்தெடுக்கவும், 50 டன் சின்ன வெங்காயத்தை சேமிப்பதற்கான குளிர்பதன கிடங்கு, சின்ன வெங்காயத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கும் தேவையான அனைத்து வசதிகளும் செட்டிகுளம் சின்ன வெங்காயம் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சக்திவேல், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் தெய்வீகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், பிரேமலதா, வட்டாட்சியர்கள் முத்துக்குமார் (ஆலத்தூர்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.