பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, இ.ஆ.ப., பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் உடல் பரிசோதனை மற்றும் இரத்தப் பரிசோதனை செய்த நபர்களுக்கு உடனடியாக மருத்துவ அறிக்கையினையும், 14 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு புதிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளையும், 5 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டக்கங்களையும், 8 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீடு அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாமினை தமிழ்நாடு முழுவதும் 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சிகிச்சையினை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மக்களை தேடி மருத்துவம் நம்மைக் காக்கும் 48 போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு இலவச தரமான மருத்துவ சிகிச்சையினை அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்து வழங்கிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகின்றது.
இம்முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றது. மேலும் பொதுமக்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இம்முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் எந்த விதமான சிகிச்சை பெற வந்திருக்கிறார்கள் என்று கேட்டு அறிந்து அந்த சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவரின் அறைக்கு வழிகாட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்றும், முகாமிற்கு வரும் பொது மக்களின் தகவல்களை முறையாக பதிவேடுகளில் பதிவு செய்கிறார்களா என்றும், பொது மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், முதியவர்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் முகாமில்முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வேண்டி விண்ணப்பித்த பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், பொதுமக்களுக்கு இரத்தப் பரிசோதனை, மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளையும், கர்ப்பினி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சு.தேவநாதன், ஆலத்தூர் முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத் துறை இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், பிரேமலதா, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துக்குமரன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.