தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரியகுமார், வி.பி.ஆர்.இளம்பரிதி, எம்.நடேசன் ஆகியோர் தலைமையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2025 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை பொது தகவல் அலுவலர்களுக்கான தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர்கள் ஆர்.பிரியகுமார் வி.பி.ஆர்.இளம்பரிதி எம்.நடேசன் ஆகியோர் தலைமையில், நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்து துறைகளின் சார்பில் கலந்து கொண்ட பொதுத் தகவல் அலுவலர்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு மற்றும் கேள்விகளுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையர்கள் அவர்களால் விளக்கங்களும் மற்றும் அறிவுரைகளும் வழங்கப்பட்டது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களின் மீது உரிய காலத்தில் முழுமையான தகவல்கள் வழங்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டுமென அனைத்து பொது தகவல் அலுவலர்களுக்கும் ஆணையர்கள் அறிவுறுத்தினார்கள்.

பின்னர் ஆணையர்கள் தெரிவித்ததாவது :
தகவல் அறியும் உரிமைச் சட்டம் அனைத்து தரப்பு மக்களும் கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இன்றைய காலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில் அதிகமாக உள்ளது. முன்பெல்லாம் குறைவான மனுக்களே தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்படும். தற்போது அதிக அளவிலான மனுக்கள் பெறப்படுகின்றது.

அப்படி வழங்கப்படும் மனுக்களை அரசு அலுவலர்கள் எவ்வாறு கையாள வேண்டும். உங்களுக்கு மனு கிடைக்கப்பெற்ற எத்தனை நாட்களுக்குள் பதில் வழங்கிட வேண்டும். நீங்கள் வழங்கும் பதில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கிடவே இந்நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடத்தப்படுகின்றது.

அரசுத்துறைஅலுவலர்கள் தங்களுக்கு வரும் மனுக்கள் குறித்த பதிவேட்டினை பராமரிக்க வேண்டம். மனு பெறப்பட்ட நாள், மனு பதிவு செய்யப்ட்ட நாள், மனுவின் மீது எடுத்த நடவடிக்கை என அனைத்து தகவல்களும் அந்தப்பதிவேட்டில் இருக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு காலம் தாழ்த்தாது உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய பதில்களை வழங்கிட வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத பொதுத்தகவல் அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே, மனுதாரர் அளிக்கும் மனுவை நன்றாக பரிசீலித்து 30 நாட்களுக்குள் அவருக்கு உரிய தகவல் தர வேண்டும் என்பதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள
வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், அனைத்து துறை பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்