கடலாடி நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு.

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடலாடி, சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு சேவை செய்து வருகிறது. மேலும், நீதிமன்றத்தில் இ.சேவை மையமும் உள்ளது. தற்போது தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருவதால் இட நெருக்கடி காரணமாக நிரந்தர இடம் ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட சட்டத்துறையின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இடம் ஒதுக்குவதில் ஒன்றரை வருட காலமாக பிரச்சனை இருந்து வருவதை காரணம் காட்டி கடலாடியிலிருந்து சுமார் 24 கிமீ தூரம் உள்ள சிறைக்குளம் எனும் கிராமத்தில் இடம் ஒதுக்குவதாக கிடைத்த தகவல் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.
உடனே இந்த நீதிமன்ற இடமாற்றும் ஆலோசனைகளை அரசு அதிகாரிகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் கடலாடி ஒன்றிய பொறுப்பாளர் ராஜ்குமார் கூறுகையில், “இந்த நீதிமன்ற இடமாற்ற ஆலோசனை கடலாடி மற்றும் சுற்றுவட்டார மக்களின் சம்பந்தபட்ட வழக்குகளுக்காக பொதுமக்களை அலைகழிக்கழிப்பதாக அமையும். எனவே கடலாடி நீதிமன்றம் கடலாடி எல்லைக்குள்ளேயே அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
வர்த்தக சங்க நிர்வாககுழு உறுப்பினர் கார்த்திக்குமார் கூறுகையில், “எங்கள் சங்கத்தின் மூலம் நீதிமன்றத்திற்கு கடலாடியை ஒட்டியுள்ள பகுதிகளில் 3 வெவ்வேறு இடங்களை கண்டறிந்து நீதித்துறைக்கு பரிந்துரை செய்தோம். அந்த இடத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் எனவும், பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து அகலமான சாலை அமைக்கவேண்டும்” என்றார். இதுகுறித்து மாவடட ஆட்சியர், கடலாடி வட்டாட்சியர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.