முதுகுளத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசல் பொது மக்கள் அவதி.

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் நகரில் ஆக்கிரமிப்புகள் வழக்கத்தை விட நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
நகரின் முக்கிய சாலையின் இருபுறமும் அமைந்துள்ள வணிகக் கடைகள் மற்றும் விற்பனையாளர்கள் ஆக்கிரமிப்பை அதிகரித்ததுடன், சரக்கு வண்டிகள் மற்றும் ஆட்டோக்கள் சாலையை மறித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. முதுகுளத்தூர் நகரில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகமான மக்கள் மற்றும் வாகன நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. தற்போது ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் மருத்துவமனைக்கு செல்லும் அவசர நோயாளிகள் வரை அனைவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக
சாலைகளில் சிக்கித் தவிக்கின்றனர். உடனடியாக எஸ்பிஐ வங்கி முதல் காந்தி சிலை வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தினமும் குறிப்பாக முகூர்த்த நாட்களில் போக்குவரத்து ஒழுங்கை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். முதுகுளத்தூர் நகர் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.