வார விடுப்பு இல்லையா? போலீசார் நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்…

வார விடுப்பு இல்லையா? போலீசார் நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்.. ஐகோர்ட் கிளை உத்தரவு

காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன பிர ச்சனை? வார விடுப்பு வழங்கத் தவறினால், காவலர்கள் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது

காவலர்களுக்கு வாரவிடு முறை வழங்க தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதை எதிர்த்து, மதுரை ஆண்டிப்பட்டி காவலர் செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார்.

காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை வார விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசாணையை நடை முறைப்படுத்தக் கோரிய வழக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு லட்சத்து 20 ஆயிரம் காவலர்கள் இருக்கும் நிலையில், ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்திருப்பது பாராட்டத்தக்கது என்று நீதிபதி கூறினார்.மற்ற காவலர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? இது மேலதிகாரிகளின் மீதான அச்சமா? இது வியப்பாக உள்ளது. ஜனநாயகம் மற்றும் மனித உரிமை அனைவருக்கும் தானே என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு சங்கங்கள் இருக்கும் நிலையில் காவல் துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை? இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது. கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் இருக்கும் போது தமிழ்நாட்டில் ஏன் இல்லை எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

2021 ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இன்னமும் நடைமுறைப் படுத்தப்பட வில்லை என்றால் அந்த அரசாணையும் விளம்பர நோக்கத்திற்காக பிறப் பிக்கப்பட்டது எனக் கூற இயலுமா? காவலர் விடுமுறை அரசாணையை உயரதிகாரிகள் நடைமுறைப்படுத்தாதது ஏன்? இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? முதலமைச்சரின் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப் பதில்லையா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், காவலர் வார விடுமுறை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினர். இது குறித்து தமிழக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந் நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவலர்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன பிரச்சனை? இனி வரும் காலங்களில் வார விடுப்பு வழங்கத் தவறினால், காவலர்கள் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்” என உத்தர விட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்