இனி வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் காய்கறிகளைஆர்டர் செய்து கொள்ளும் வகையில்…

மதுரை மாவட்டம்

செய்தியாளர் சுற்றுப் பயணம்

இனி வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் காய்கறிகளை
ஆர்டர் செய்து கொள்ளும் வகையில்

உழவர் சந்தைகள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது குறித்து

காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாய பெருமக்களை

நேரடியாக சந்தித்து  அவர்களின் கருத்துக்களை 

மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.மா.சௌ.சங்கீதா, ..., அவர்கள் கேட்டறிந்தார்.

                மதுரை மாவட்டத்தில்  அண்ணாநகர், சின்ன சொக்கிகுளம், பழங்காநத்தம் மற்றும் ஆனையூர் ஆகிய 4 இடங்களில்  செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளை டிஜிட்டல் மயமாக்கப்படுவது குறித்து,  மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள்,  செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாய பெருமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களை  நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துக்களை  கேட்டறிந்தார்.

                தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

                தமிழகத்தில் முதல் முறையாக கடந்த 2000-வது ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மதுரை அண்ணாநகரில் உழவர் சந்தை திட்டத்தை தொடங்கி வைத்தார். இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை பொதுமக்கள் வாங்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அவரது ஆட்சிக்காலத்திற்கு பிறகும் இந்த திட்டத்தின் முக்கியத்துவம் கருதி  இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்தது.

                மதுரையில் தற்போது அண்ணாநகர், சின்ன சொக்கிகுளம், பழங்காநத்தம் மற்றும் ஆனையூர் ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் விற்பனையை கருத்தில் கொண்டு உழவர் சந்தையில் இருந்து வீடுகளுக்கே நேரடியாக டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம்  முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் உள்ள உழவர் சந்தைகள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன.

                விரைவில் மதுரையிலுள்ள உழவர் சந்தைகளில் இருந்து பொது மக்களின் வீடுகளுக்கு நேரடியாக காய்கறிகள் விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்படும். தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும், உழவர் சந்தைகளில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு பதிவுசெய்த விவசாயிகளுக்கு எலக்ட்ரானிக் தராசுகள் வழங்கப்படும்.

                அண்ணாநகர் உழவர் சந்தையிலிருந்து, மாட்டுத்தாவணி மார்க்கெட் வெறும் 2 கி.மீ. தொலைவே உள்ள போதிலும், பொது மக்கள் உழவர் சந்தைகளிலேயே காய்கறிகளை வாங்க விரும்புகின்றனர்.  இங்கு குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட போதிய சேமிப்பு கிடங்கு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையினை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  சேமிப்பு கிடங்கு வசதிகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மதுரை.

தொடர்புடைய செய்திகள்