பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா…
பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் ரெஜினா கசாண்ட்ரா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. ‘அழகிய அசுரா’ படத்தில் கதாநாயகியான ரெஜினா கசாண்ட்ராவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தந்தன.

இதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அங்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
ரெஜினா கசாண்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’, ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘விடா முயற்சி’ படத்தில் யாரும் எதிர்பாராத தோற்றத்தில் நடித்து அசர வைத்தார். இவரது வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தது. தற்போது இந்தி படங்களான சன்னி தியோலுடன் ‘ஜாத்’, அக்ஷய் குமார், அனன்யா பாண்டேவுன் ‘ கேசரி 2’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் சுந்தர்.சி. இயக்கத்தில் மூக்குத்தி அம்மன்2-ம் பாகத்திலும் என பிசியாக நடித்து வருகிறார். இதனால் ரெஜினா கசாண்ட்ரா பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.