பெரம்பலூர் மாவட்டம்தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வாக நடத்தப்படும் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப.,தலைமையில், “நிமிர்ந்த நன்னடை” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி உரையாற்றினார்
தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வாக நடத்தப்படும் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில் இன்று (13.08.2025) தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில், “நிமிர்ந்த நன்னடை” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
தமிழ் இணையக் கல்விக்கழகம் உயர்கல்வித் துறையுடன் இணைந்து ’மாபெரும் தமிழ்க் கனவு’என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வைக் கடந்த 2022-23, 2023-24 கல்வியாண்டுகளில் சிறப்பாக நடத்தி முடித்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில், 300 சொற்பொழிவுகள், 2,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் 100-வது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர்இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க அடுத்த கட்ட நிகழ்ச்சியானது 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. உலகின் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையான தமிழ்ப் பண்பாட்டின் பெருமைகளையும் வளமையையும் அது எதிர்கொண்ட சவால்களையும் மாணவர்களாகிய உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்கானதே இந்நிகழ்வு.
தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், உயர்தனிச் செம்மொழியான தமிழின் சிறப்பு, இலக்கியச் செழுமை, தமிழர் தொன்மை, சமூக சமத்துவம், மகளிர் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தொழில் வளர்ச்சி, கல்விப் புரட்சி முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு தெரிவித்தார்.
சிறப்பு சொற்பொழிவாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் இளைய தலைமுறையினருக்கு தமிழரின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டு சேர்த்திடும் வகையில் ஒரு புதிய முன்னெடுப்பாக மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. நாளைய தலைமுறைகளான கல்லூரி மாணவர்கள் தமிழர்களின் வாழ்வும், தமிழ் மொழி குறித்த தொன்மைகளையும், சிறப்புகளையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வுலகிலேயே தொன்மை வாய்ந்த வாழ்வினை கொண்டவர்கள் தமிழர்கள்தான். இது பல ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிறப்புமிக்க தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கொண்டு செல்வதில் மாணவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். இச்சிறப்பு வாய்ந்த பணியை மாணவர்கள் கொண்டு சென்று தமிழையும், தமிழர் பண்பாட்டையும் பேணிக் காத்திட வேண்டும் என தெரிவித்தார்..
இந்நிகழ்வின்போது, தமிழ்ப்பெருமிதம் சிற்றேட்டிலுள்ள குறிப்புகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் என்ற சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களையும், சிறப்பான பங்களிப்பை வழங்கும் மாணவர்களைக் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் என்ற சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் எழுத்தாளர், ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன், கல்லூரிக்கனவு, உயர்வுக்குப்படி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த 17 அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ச.வைத்தியநாதன், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) சேகர், அரசு கல்லூரி மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


