பெரம்பலூர் மாவட்டம்தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்கும் நிகழ்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நேரலையில் கண்டு உறுதிமொழி ஏற்றனர்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
அதன்படி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப, தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பசேரா இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவியர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் நிகழ்ச்சியினை நேரலையில் பார்வையிட்டு உறுதிமொழியினை ஏற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 60,022 மாணவ, மாணவிகள் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் விதமாக போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டந்தோறும் நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள்.
அதன்படி, இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நபெற்றது. இதன்மூலமாக மாணவ,மாணியர்கள் ஆகிய நீங்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இந்த உறுதிமொழி பெயரளவில் இல்லாமல், உண்மையாகவே கல்லூரி மாணவர்கள் கடைபிடித்திட வேண்டும். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்விற்கு அனைத்து மாணவ,மாணவியர்களும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
மேலும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால், போதைப் பொருள் பயன்படுத்துவோர் மட்டும் பாதிப்படைவதில்லை, ஒரு தலைமுறையே பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். ஆகையினால் இளம் தலைமுறையினரான கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பயன்படுத்துவோரிடமும் இதுகுறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த உறுதியேற்பு நாளில் எப்பொழுதும் போதைப் பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என்று உறுதியாகவும், தீர்க்கமாகவும் முடிவோடு இருக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பதாகையில் கையொப்பமிட்டு, போதைப் பொருளுக்கு எதிரான Say No to Drugs என்ற சுய புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பதாகையில் புகைப்படம் எடுத்துக்கொண்டு பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் கோட்டாட்சியர் (பொ) சக்திவேல், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், உதவி ஆணையர் கலால்(பொ) முத்துகிருஷ்ணன், நகர்மன்றத் துணைத்தலைவர் ஆதவன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) செல்வகுமார், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), வள்ளியம்மை இரவிச்சந்திரன் (அரும்பாவூர்), உதவி மேலாளர் (சில்லறை வணிகம்) முத்துமுருகன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், தனலட்சுமி பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


