பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., முன்னிலையில் இன்று (09.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் நகர் பகுதிகளில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் பொருட்டு, செஞ்சேரி முதல் எளம்பலூர் தேசிய நெடுஞ்சாலை 45 புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் அதிகளவில், கனரக வாகனங்களும், இதர வாகனங்களும் செல்வதால் இச்சாலையை மேம்படுத்தி 4 வழிச்சாலையாக அமைப்பது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்து, திட்ட அறிக்கையினை விரைந்து தயார் செய்து வழங்கிட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், கோனேரிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையம் அமைப்பது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் சாலை மேம்பாட்டு பணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கழிவறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இம்மையத்தில் ஏற்படுத்திட மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பெரம்பலூர் 3 ரோடு முதல் அரியலூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின் அதிகளவு கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலைகள் சம நிலையில் இல்லாமல் உள்ளதை தொடர்ந்து, இச்சாலையினை மேம்படுத்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.234.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக 26 தெரு சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதில் பூங்கா நகர் பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கலைவாணி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்