பெரம்பலூர் மாவட்டம்மகளிர் வாழ்வாதாரம் பெருக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலமாக கடந்த நான்காண்டுகளில் 554 பயனாளிகள் ரூ.31.23 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தகவல்.


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 30 சிறுபான்மையினர் மகளிர் பயனாளிகளுக்கு ரூ.1.92 லட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., இன்று (06.08.2025) வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மகளிர் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில், எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.தமிழ்நாட்டில் கிறித்துவ சமுதாயத்தை சார்ந்த பின்தங்கிய நிலையில் உள்ள ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட மற்றும் வயதான கிறித்துவ மகளிர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், இஸ்லாமியர் சமுதாயத்தை சார்ந்த பின்தங்கிய நிலையில் உள்ள ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட மற்றும் வயதான முஸ்லிம் மகளிர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இச்சங்களுக்கு உதவித்தொகையாக ஒவ்வொரு சங்கத்திற்கும் தலா ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. மேலும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கான உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் குழுக்கடன் வழங்கும் திட்டம், ஹஜ் பயணிகளுக்கு அரசின் மானியம் வழங்கும் திட்டம், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு நிதி உதவி, தனிநபர் கடன் திட்டம், பித்தளை சலவைப் பெட்டிகள் வழங்குதல், இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், .வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்குதல், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள அரசு நிதி உதவி வழங்குதல் என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறையின் மூலமாக மகளிர் வாழ்வாதாரத்தை பெருக்கிடும் வகையில், இலவச மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் கோரும் பயனாளிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 15 நாட்கள் இலவச தையற்பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சிறுபான்மையினர் மகளிர்களுக்கு தலா ரூ.6,400 மதிப்பிலான மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் ரூ.1.92 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நலத்திட்ட உதவிகளை பெற்ற சிறுபான்மையினர் மகளிர்கள் தையற் இயந்திரத்தின் மூலம் தங்கள் சுயதொழில் செய்து, வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இதுபோன்று சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் தையல் இயந்திரம் பெற்ற பயனாளி ஷர்மிளா என்பவர் தெரிவித்ததாவது:
நான் முஹம்மது பட்டினம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சிறு வயது முதற்கொண்டே தையற் கலை மீது ஆர்வம் இருந்து வந்தது. வறுமையில் உள்ள எனது குடும்பத்தினை காப்பாற்ற சுயதொழில்செய்து வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நெடுநாள் கனவு, இன்று நினைவானது. இந்த இயந்திரம் மூலமாக நான் போதிய வருமானம் ஈட்டி எனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வேன். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தையல் இயந்திரம் பெற்ற பயனாளி ஆபிதா பீ என்பவர் தெரிவித்ததாவது:
நான் குரும்பலூர் பேரூராட்சியில் வசித்து வருகிறேன். தையல் பயிற்சி முடித்துவிட்டு, போதிய வருமானம் இல்லாமல் வீட்டுவேலை செய்து வந்தேன். அப்போதுதான் எனது உறவினர்கள் சிறுபான்மையினர் நலத்துறை மூலமாக தையற் பயிற்சியும், தையல் இயந்திரமும் இலவசமாக வழங்குவதாக தெரிவித்தார்கள். நானும் விண்ணப்பித்தேன். என் மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமிருந்து தையல் இயந்திரம் பெற்றுள்ளேன். இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
என்னைப் போன்ற ஏழைப்பெண்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. எனக்கு தையல் இயந்திரம் பெற்றுக் கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்டசிறுபான்மையினர் நல அலுவலர் ரெ.சுரேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்