பெரம்பலூர் மாவட்டம்பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் இன்று (07.08.2025) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:பெரம்பலூர் மாவட்டத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ பணிகள் தொடர்பாக மாதந்தோறும் திறனாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இக்கூட்டத்தில் கர்ப்ப கால மரணங்கள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொண்டு கரப்பக்கால மரணங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் நிகழாதவாறு கர்ப்பிணிப் பெண்களை பேணி காத்து அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழிகாட்டுதல்களை மருத்துவர்கள் வழங்கிட வேண்டும் .
உயிர் காக்கும் மருத்துவர்கள் பணியில் கவனமுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனைக்கு வருகை புரியும் கர்ப்பிணித் தாய்மார்கள் பற்றிய (PICMI) பதிவுகளை சுணக்கமின்றி உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும் எனவும், கர்ப்பிணித் தாய்மார்கள் பதிவு தாமாகவே பதிந்து கொள்ளும் முறை (Self Registration) அதிகப்படுத்தி பிரசவத்திற்கு முன்பு செய்யப்படும் (UWIN) பதிவுகள் தொய்வின்றி செய்யப்பட வேண்டும் எனவும், அவசர உதவி அறை (Control Room) சுகாதார அலுவலர் அலுவலகத்தில் இயங்கி வருவதால் இதனுடன் தொடர்பில் இருக்கவும், பிறப்பு பதிவுகள் நகராட்சிக்கு அனுப்பப்படும் ஒருமுறை இருமுறை சரிபார்த்த பின்னரே குழந்தை பிறப்பு பதிவுகளை அனுப்ப வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வளமிகு வட்டாரம் (FocusBlock) திட்டத்தின்கீழ் தேவையான மருத்துவ உபகரணங்களை விரைந்து வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.வளர் இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு செய்யப்படும் இரத்தசோகை தொடர்பான பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். குறைபாடு உள்ள மாணவ, மாணவிகள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தகுதியுள்ள தம்பதிகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆலோசனை வழங்கி குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்வோர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
மேலும், தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் 11.08.2025 முதல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனத்து பள்ளிகளிலும், காலை நடக்கும் இறைவணக்க கூட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைக்க வேண்டும். இதன் தொடர்பான விழிப்புணர்வுகளை மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். இந்த ஆண்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் 100% அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். இதன் தொடர்பான பணிகளை சுகாதார துறை அலுவலர்களும், பள்ளிகல்வித்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்தார்.இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, முதன்மை கல்வி அலுவலர் (பொ) திரு.செல்வகுமார், துணை இயக்குநர் (காசநோய்) மரு.நெடுஞ்செழியன், தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் மரு.விவேகானந்தன் வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்