கமுதி பேரூராட்சி அலுவலகத்தைமுற்றுகையிட்ட கிராம மக்கள்.
கமுதி பேரூராட்சி அலுவலகத்தை
முற்றுகையிட்ட கிராம மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளி காக்குடி ஊராட்சியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை காக்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கமுதி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பல ஆண்டுகளாக தெற்கு முதுகுளத்தூர் சாலை குண்டாற்றுப் படுகையில் கொட்டி வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பேரூராட்சி குப்பைகளை கமுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொட்டி வருகின்றனர். இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு சிங்கப்புலியாபட்டி விலக்கு சாலையில் குப்பைகளை கொட்டியதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, பேரூராட்சி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் காக்குடி கிராமத்தில் உள்ளஅரசு தொடக்கப் பள்ளி அருகே கமுதி பேரூராட்சி குப்பைகள் கொட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காக்குடி கிராமத்தைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் யசோதா இனிமேல் அங்கு குப்பைகள் கொட்டப்படாது என உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
