பெரம்பலூர் மாவட்டம் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் ரூ.99.20 லட்சம் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பென்னகோணம், கீழப்பெரம்பலூர், வயலூர், கருப்பட்டாங்குறிச்சி ஆகிய கிராமங்களில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (28.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் ரூ.99.20 லட்சம் மதிப்பிலான 06 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 03 முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இதில் பென்னகோணம் அரசு உதவி பெறும் டி.இ.எல்.சி தொடக்கப்பள்ளியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கல்வி சார்ந்த பணிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து, துரிதமாக செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்கள். அந்த வகையில் கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பென்னக்கோணம் TELC பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் மூலம் இந்தக் கட்டடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கோரிக்கை வைத்து, தற்போது அந்த கோரிக்கையின் வாயிலாக இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு குன்னம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட பாரம்பரியம் கொண்ட, பல்வேறு மாணவர்களை உருவாக்கிய, நீண்ட காலமாக புதிய கட்டிடங்கள் இல்லாமல் இருந்த இந்தப் பள்ளிக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் இந்த இரண்டு வகுப்பறை கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கிராமத்தில் இருந்து கூடுதலான மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உண்டான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி வளர்ச்சி என்பது மிக முக்கியம். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிடும் வகையில் எனது முயற்சியில் உயர்வுக்குப்படி என்ற கையேடு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த காலங்களை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்த சமுதாயத்திற்கான பணியினை நான் திறம்பட செய்ததாக உணர்கிறேன். இதன் அடுத்த கட்ட முயற்சியாக கிராமப்புறங்களில் உள்ள மாணவ, மாணவிகள் நகர்புறங்களில் உள்ள மாணவ, மாணவிகளை போலவே அவர்களுக்கு போட்டியாக வரும் வகையில், ஆங்கிலத்தில் சரளமாக எழுத படிக்க உதவிடும் வகையில், ஆங்கில பயிற்சி வகுப்பினை என்னுடைய சார்பில் ஒவ்வொரு பள்ளியிலும் நடத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். இதனை மிக விரைவில் செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இந்தத் திட்டத்தினை பென்னக்கோணம் அரசு பள்ளியில் துவக்கி வைக்கவும் திட்டமிட்டு, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நமது பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் கூடுதலாக கல்வி பயில்வதற்கு உண்டான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்று வழங்கிட வேண்டிய கடமையும் எனக்கு உள்ளது.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மூலம் பெற்று அதனை நிவர்த்தி செய்வதற்கு உண்டான அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறேன். மாணவர்களும் பொது மக்களும் அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில், குன்னம் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வயலூர் ஊராட்சியில் வயலூர் கூட்டுறவு வங்கி – கைப்பெரம்பலூர் ரோடு மேற்குபுறம், வயலூர் மேற்குபுறம் மற்றும் கருப்பட்டாங்குறிச்சி மேற்கு புறம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி, ஊராட்சி பொதுநிதியின் கீழ் வயலூர் கிராமத்தில் ரூ.14.13 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் மற்றும் 366 வீடுகளுக்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு அமைக்கும் பணி, கனிமங்கள் மற்றும் சுரங்க நிதியின் கீழ் அகரம்சீகூர் ஊராட்சியில் ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் கீழப்பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.44.20 லட்சம் மதிப்பீட்டில் 06 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பென்னகோணம் ஊராட்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன சமுதாய பொறுப்பு நிதியின் மூலம் கீழப்பெரம்பலூர் ஆதிதிராவிடர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி என மொத்தம் ரூ55 லட்சம் மதிப்பீட்டில் 03 புதிய பணிகள் என பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்கள்.
இவ்வாறாக இன்று மட்டும் ரூ.99.20 லட்சம் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் செயல் இயக்குநர் அண்ணாதுரை, முதன்மை பொது மேலாளர் விவேக் கோயல், பொது மேலாளர் கலைவாணன், டி.எல்.சி பள்ளி தாளாளர் மறைதிரு.அருள் ஜே.ஜே.குமார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேகர், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்