பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முதல் தொடங்கப்படவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 15 அரசுத் துறைகள் பங்கேற்று 46 சேவைகள் வழங்கப்படவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை முதல் தொடங்கப்படவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 15 அரசுத் துறைகள் பங்கேற்று 46 சேவைகள் வழங்கப்படவுள்ளது. முகாமில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்து விளக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்களின் “செய்தியாளர்கள் சந்திப்பு” மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (14.07.2025) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நாளை கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில், நாளை (15.07.2025) ஊரகப் பகுதிகளுக்கு வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தளி அரசு பள்ளியிலும், நகர்ப்புற பகுதிகளுக்கு பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்பட 1வது மற்றும் 2வது வார்டு பகுதிகளுக்கு என்.எஸ்.கே திருமண மஹாலிலும், நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில்“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நகராட்சி பகுதிகளில் 08 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 09 இடங்களிலும், நகர்ப்புற ஊராட்சி பகுதிகளில் 05 இடங்களிலும், ஊராட்சி பகுதிகளில் 64 இடங்களிலும் என மொத்தம் 86 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1,91,548 வீடுகள் உள்ளன. 532 மகளிர் சுய உதவி குழு தன்னார்வலர்கள் சிறப்பு முகாம்களில் ஈடுபட உள்ளனர். 229 தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். 105 சுய உதவி குழு தன்னார்வலர்கள் நகர்புறங்களில் நடைபெற உள்ள முகாம்களிலும், 124 சுய உதவிக் குழு தன்னார்வலர்கள் ஊரகப் பகுதிகளில் நடைபெற உள்ள முகாம்களிலும் பணியமர்த்தப்பட உள்ளார்கள். வீடு வீடாக விண்ணப்பங்களை விநியோகிக்கும் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் விண்ணப்பத்தை கொடுத்த பிறகு அதற்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட USS Daily Tracking App என்ற செயலியின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதி செவ்வாய் புதன் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 4 நாட்களில் நாள் ஒன்றுக்கு 2 முகாம்கள் வீதம் ஒரு வாரத்திற்கு மொத்தம் 8 முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் ஆதார் மையங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையங்கள், மருத்துவ துறை சார்பாக மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு மையங்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சேவை வழங்க உள்ளனர். அனைத்து முகாம்களிலும் காவல்துறை மூலம் “MAY I HELP YOU BOOTH” அமைக்கப்பட உள்ளது. முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் உள்ளிட்டைவைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஒலிபெருக்கி கொண்டு பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் முகாம் நடைபெறும் விவரங்கள் தொடர்பாக உள்ளூர் கேபிள் டிவி சேனல்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன.
மகளிர் சுய உதவி குழு தன்னார்வலர்களின் பணிகளை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பாளர்கள், முகாமில் மனுக்களை பதிவேற்றம் செய்யும் கணினி இயக்குபவர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,93,255 குடும்ப அட்டைதாரர்களில், 1,10,323 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 கிடைக்காத குடும்ப அட்டைதாரர்கள் முகாம் நடைபெறும் நாட்களில் இதற்கென விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு முகாமிலேயே பூர்த்தி செய்யப்பட்டு, மேற்படி விண்ணப்பங்கள் அன்றைய தினமே இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலமாக தொலைபேசி செயலில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்காக முகாம் ஒன்றுக்கு 4 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் என மொத்தம் 344 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முகாம்களில் பங்கேற்க உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வல பணியாளர்களுக்கு ஏற்கனவே உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 38,000 குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டுள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏற்கனவே கலைஞர் நாளை உரிமைத் தொகை பெற்று வருபவர்கள் அவர்கள் அவர்களது வங்கி கணக்கு திருத்தம் மற்றும் இதர கோரிக்கைகளும் இம்முகாமில் வருவாய் துறை மூலம் தனியே பரிசீலிக்கப்படும். எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று அரசு சேவைகள் பெற்றும், கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சொர்ணராஜ் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
