பெரம்பலூர் மாவட்டம்போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர்ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தலைமையில் இன்று (09.08.2025) பார்வையிட்டு, மருத்துவ முகாமிற்கு வந்திருந்த நபர்களின் குறைகளை கேட்டறிந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் முழு உடல் பரிசோதனை செய்த நபர்களுக்கான உடனடியாக மருத்துவ அறிக்கையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.5,435 மதிப்பிலான காதொலி கருவி, ஊன்றுகோல், மடக்கு ஊன்றுகோல் ஆகிய உதவி உபகரணங்களும், 17 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையினையும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாமினை தமிழ்நாடு முழுவதும் 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். இம்மருத்துவ முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் துங்கபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 02.08.2025 அன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் அரசு மேல்நிலை பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமினை பார்வையிட்ட மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள், மருத்துவ முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் தாங்கள் எவ்வித சிகிச்சைக்காக வந்துள்ளீர்கள் என கேட்டறிந்து அது தொடர்பான மருத்துவ சிகிச்சை வழங்கிடுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் தேவையான விளம்பர விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
கிராமப்புறங்களில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், முதியவர்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவு அரங்குகளையும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.என்.கிருஷ்ணமூர்த்தி, இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் மரு.விவேகானந்தன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.மகாலட்சுமி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


