வைகைஅணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது – மொத்தமாக வைகை அணையில் இருந்து 3969 கன அடி தண்ணீர் ஐந்து மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வைகை ஆற்றங்கையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணை 63 அடியை கடந்துள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசன பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் உத்தரவுப்படி வைகைஅணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.அணையில் உள்ள சிறிய 7 மதகுகள் வழியாக , ஐந்து மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் யாரும் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளிப்பதற்கு இறங்க வேண்டாம் என்றும் வைகைஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் வைகை பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.திறக்கப்படும் இந்த தண்ணீர் வைகைஆற்றில் ஐந்து மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் ஆதாரங்கள் நிரம்பும் வகையிலும் , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை இரண்டு மற்றும் மூன்றாம் பூர்வீக பாசனபகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிறைந்து 20,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் திறக்கப்பட்டுள்ளதாகவும்மொத்தம் இன்று முதல் 7 நாட்களில் 1251 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகவும் வைகை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர் மட்டும் 63.09 அடியாகவும் அணையின் நீர் வரத்து 571 கனஅடியாகவும் அணையின் நீர் இருப்பு 4221 மில்லியன் கன அடி ஆகவும்,அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 3000கன அடி தண்ணீரும் மதுரை மாவட்ட இருபோக சாகுபடி நிலங்களின் முதல் போக சாகுபடிக்கு கால்வாய் வழியாக 900கன அடி தண்ணீரும் மதுரை தேனி மாவட்ட குடிநீருக்கு 69கன அடி தண்ணீர் என் மொத்தமாக 3969 கன அடி தண்ணீர் திறக்கபட்டுள்ளது.
