பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழப்புலியூர் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.

பெரம்பலூர் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழப்புலியூர் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை சென்னை அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் இருந்து இன்று (03.07.2025) காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியினை நேரலையில் கண்டுகளித்து, பின்னர் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கீழப்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை,எளிய அடித்தட்டு மக்களின் நலனிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பொதுமக்களின் உடல்நலன் மீது மிகுந்த அக்கறைக்கொண்டு, மக்களைத் தேடி மருத்துவம், நம்மை காக்கும் 48, முதலமைச்சரின் விரிவான மருத்து காப்பீட்டுத் திட்டம் போன்ற எண்ணிலடங்கா மக்களின் உயிர்காக்கும் திட்டங்களை அறிவித்து திறம்பட செயல்பட்டு, பொதுசுகாதாரத்துறையில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று வருகிறார்கள்.
அரசு மருத்துவமனைகள் இல்லாத பகுதிகளிலும் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், கீழப்புலியூர் கிராமத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள்.
இதனையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரசவ அறை, வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த கீழப்புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையமானது, கீழப்புலியூர் மற்றும் எழுமூர் ஆகிய இரண்டு துணை சுகாதார நிலையங்களை உள்ளடக்கியது. கீழப்புலியூர் துணை சுகாதார நிலையத்தில், கீழப்புலியூர், சிறுகுடல், கே.புதூர், சிலோன் காலனி, ஆகிய கிராமங்களும், எழுமூர் துணை சுகாதார நிலையத்தில், எழுமூர். ஆய்குடி, மழவராயநல்லூர் மற்றும் காருக்குடி ஆகிய கிராமங்களும் பயன்பெறுகின்றன.
இன்று திறக்கப்பட்ட புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் கீழப்புலியூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 14,000 பொது மக்கள் பயனடைவார்கள்.
கீழப்புலியூர் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 மருத்துவர்கள் உட்பட 4 செவிலியர்கள், 1 ஆய்வக நுட்புநர், 1 மருந்தாளுநர், 1 பகுதி சுகாதார செவிலியர், 2 கிராம சுகாதார செவிலியர், 1 சுகாதார ஆய்வாளர், 1 தாய்மை துணை செவிலியர், 1 பல்நோக்கு சுகாதார மருத்துவமனை பணியாளர் என 12 பணியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.கொ.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ம.கீதா, அட்மா தலைவர் திரு.வீ.ஜெகதீசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.துரைசாமி வட்டார மருத்துவ அலுவலர் மரு.ப.சேசு, தேசிய சுகாதார குழுமம் உதவி திட்ட அலுவலர் மரு. விவேகானந்தன், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்