பெரம்பலூர் மாவட்டம்2025ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு குழுகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2025ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு குழுகூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (23.07.2025) நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக தமிழ்நாட்டின் ஒலிம்பிக் போட்டிகள் என்ற பெருமையுடன் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 05 பிரிவுகளில் மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 07 வகையான விளையாட்டு போட்டிகளும் ,மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும் இவ்வாண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் பொதுபிரிவினருக்கு புதிய விளையாட்டுக்களான (E-SPORTS : E-chess, Street Fighter, E-football, Pokeman unite, Valorant மற்றும் BGMI) சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 22.08.2025 அன்று முதல் 12.09.2025 அன்று வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளை சிறப்பாக நடத்திடும் பொருட்டு காவல்துறை, நகராட்சி, சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை, பள்ளி கல்வித்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்திட வேண்டும்.
போட்டி நடைபெறும் இடங்களில், தனித்தனியாக மருத்துவ குழு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்திட பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுய உதவி குழுக்கள் மூலமாக அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் மகளிர் அதிக அளவில் பங்கேற்க செய்யும் வகையில் மகளிர் திட்ட இயக்குநர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போட்டியில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதுடன், போட்டிகள் நடைபெறும் இடங்களை நகராட்சி பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்திடவும், அனைத்து பகுதிகளிலும் குப்பைத் தொட்டிகள் வைத்து மைதானத்தினை குப்பை இன்றி பராமரிக்கவும் நகராட்சி நிர்வாக துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நேரு யுவகேந்திரா தன்னார்வலர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர்களுடன் இணைந்து, ஊராட்சி ஒன்றிய வாரியாக பொறுப்பேற்று அனைத்து விளையாட்டு போட்டி பிரிவிலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அதிக அளவில் முன்பதிவு செய்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திருமதி.பொற்கொடி வாசுதேவன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) திரு. செல்வக்குமார், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
