பெரம்பலூர் மாவட்டம்தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் போன்ற புகையிலை பொருட்கள் சுமார் 63 கிலோ உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,75,000 அபராதம் விதித்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி,‌ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மரு. சுகுந்தன் தலைமையில் இன்று குன்னம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, அல்லிநகரம் பகுதியிலுள்ள மகாராஜா பெட்டிக்கடை, மகாராஜா ஹோட்டல், செஞ்சேரி கண்ணன், சரஸ்வதி பெட்டிக்கடை ஆகிய 04 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவு கலந்த நிக்கோட்டின் புகையிலைப் பொருட்களான ஹான்ஸ், கூலிப் போன்ற பொருட்கள் சுமார் 63 கிலோ பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு அதனை பறிமுதல் செய்து, கடைகள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் மூடப்பட்டு, ரூ.1,75,000 அபராதம் விதிக்கப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ அல்லது TN DRUG FREE App என்ற செயலி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மரு.சுகுந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு. அழகுவேல், திரு.கதிரவன், திரு.சின்னமுத்து, திரு விக்னேஷ், திருமதி புவனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்