பெரம்பலூர் மாவட்டம்சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (24.07.2025) நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதத்தில் நடைபெற்ற சாலை விபத்துகளின் அடிப்படையில், அப்பகுதிகளில் விபத்துகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்றும், அந்த நடவடிக்கைகளுக்கு பிறகு விபத்துகள் நடப்பது குறைந்துள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.மேலும், அதிக விபத்து நடைபெறும் இடங்களில், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக செய்து முடித்து அதன் குறித்த விபரங்களை ஒருவார காலத்திற்குள் அறிக்கை வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட பெரும்பாலான சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் தலைப்பகுதி பாதிக்கப்பட்டு தலைக்கவசம் அணியாமல் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதை தவிர்த்திடும் வகையில் தலைக்கவசம் அணிவதும், 4 சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதை போக்குவரத்து காவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு போதிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும் தலைக்கவசம் அணியாமல் செல்லும் நபர்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்ட இயக்குநர் அவர்கள் மாநில நெடுஞ்சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்படைக்கப்பட்ட பெரம்பலூர் முதல் அரியலூர் வரையிலான சாலையில் மேம்பாட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர், இரூர், போன்ற இடங்களில் மேம்பால பணி நடைபெறும் பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கும் வகையில் பிரதிபலிப்பான்கள் வைக்கவும் தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கவும், பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நெடுஞ்சாலைகள் கோட்டப்பொறியாளர் அவர்கள் கிராமப்புற சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகளில் விபத்துகள் அதிகமாக ஏற்படக் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
பின்னர் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு ஏற்படக்கூடிய பகுதிகள், புதிதாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் ஏதேனும் இருப்பின் ஆரம்ப நிலையிலேயே வருவாய்துறை அலுவலர்களும் காவல் துறையினரும் இணைந்து அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைதியான சூழலை ஏற்படுத்திட வேண்டும். நிலம் அபகரிப்பு புகார், கோவில் மானிய நிலம் மற்றும் கோவில் சம்மந்தப்பட்ட புகார்களுக்கு காவல்துறையினர் தொடர்புடைய அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை பேணி காத்திடவேண்டும். கிராமங்களில் மதம், இனம், தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படும் இடங்களில் இருதரப்பினரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உடனுக்குடன் தீர்வுகளை ஏற்படுத்திட வேண்டும் என வருவாய்துறையினருக்கும்,காவல்துறையினருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு, துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியராஜ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திருமதி.கலைவாணி, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.சரவணபவ, தேசிய நெடுஞ்சாலை காவல் ஆய்வாளர் திரு,கிள்ளிவளவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்(குற்றவியல்) திரு.சத்தியமூர்த்தி அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்