பெரம்பலூர் மாவட்டம்பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.7,616.17 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.7,616.17 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கான, 2025-2026-ம் நிதி ஆண்டிற்கான மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பாக, ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் வழிகாட்டுதலின்படி, தயார் செய்யப்பட்ட கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று (25.07.2025) வெளியிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ 7,616.17 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாய கடன்களுக்காக ரூ 6,686.17 கோடியும், சிறு குறு தொழிலுக்கு ரூ.649.28 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.280.72 கோடியும் கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இது கடந்த வருடத்தை விட ரூ.1394.70 கோடி வங்கிகளுக்கு கூடுதலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023-24-ம் வருடத்திற்கு ரூ. 5500.31 கோடியும், 2024-25 ஆண்டிற்கு ரூ.7153.37 கோடியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 87.78 சதவீதமும், சிறு குறு தொழிலுக்கு 8.52 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 3.68 சதவீதமும் என இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
மேலும் 2025-26-ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கைபடி, அனைத்து வங்கிகளும் இலக்கை அடைய வேண்டும். வங்கியாளர்கள் அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, மாவட்டதின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ரிசர்வ் வங்கி மேலாளர் திரு.ஸ்ரீதர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, முன்னோடி வங்கி மேலாளர் திரு.பரத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
