கோவை ரயில் நிலையத்தில் 1.5 கிலோ கஞ்சா சிக்கியது!

கோவை ரயில் நிலையத்தில் 1.5 கிலோ உலர்ந்த கஞ்சாவை வைத்திருந்த ஒருவர் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். ரயில்வே பாதுகாப்புப் படை கோவை சந்திப்பு குற்றத் தடுப்பு மற்றும் கண்டுபிடிப்புப் பிரிவினர், ரயில்வே பாதுகாப்புப் படையினர், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து ரயில்கள் மற்றும் நடைமேடைகளில் சட்ட விரோதப் பொருட்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சிறப்பு சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, புது டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரள விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ஒரு நபர் வெள்ளை நிற பாலித்தீன் பையுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதை கண்டு அறிந்தனர். அந்தப் பையை இறக்கி, சோதனையிட்டதில், சுமார் 1.5 கிலோ உலர்ந்த கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 75,000 ஆகும். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் அபு தாஹிர் (வயது 27), என்பதும், மலப்புரம் மாவட்டம் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.