பெரம்பலூர் மாவட்டம்எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து நடத்திய எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாட்டுப்புற கிராமிய கலை குழு கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இ.ஆ.ப., இன்று (11.07.2025) தொடங்கி வைத்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு இணைந்து, எச்.ஐ.வி தொற்றினை பூஜ்ஜியமாக கொண்டு வருவதும், புதிய தொற்று இல்லாமை, எச்.ஐ.வி / எய்ட்ஸால் இறப்பு இல்லாமை மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிக்காமை என்ற தேசிய கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நோக்கத்தினை அடையும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய அடிப்படை தகவல்கள் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டாரங்களிலும் உள்ள முக்கிய கிராமங்களில் நாட்டுப்புற கலைகளான கரகாட்டம், பறை இசை மற்றும் ஒயிலாட்டம் போன்ற 10 கிராமிய நிகழ்ச்சிகள் மூலமாக எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது.
அதன் தொடக்கமாக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இன்று நடைபெற்ற நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ், பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர்/ மாவட்ட சுகாதார அலுவலர் மரு. கீதா, மாவட்ட திட்ட மேலாளர் (பொ) திருமதி சுமதி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.நெடுஞ்செழியன், தேசிய சுகாதாரக் குழுமம் உதவி திட்ட அலுவலர் மரு.விவேகானந்தன், ஆற்றுப்படுத்துநர் பழநிவேல் ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், நம்பிக்கை மைய ஆலோசகர்கள், எச்.ஐ.வி சேவை பிரிவு தொண்டு நிறுவனர் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
