பெரம்பலூர் மாவட்டம்வேளாண் இயந்திரங்களின் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, நடப்பாண்டில் ரூ.2.82 கோடி மதிப்பிலான 163 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.1.39 கோடி மானியத்தில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம்
வேளாண் இயந்திரங்களின் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, நடப்பாண்டில் ரூ.2.82 கோடி மதிப்பிலான 163 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.1.39 கோடி மானியத்தில் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கம் எதிரில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்களின் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இன்று (09.07.2025) தொடங்கி வைத்து, ரூ.43.20 லட்சம் மதிப்பிலான 32 வேளாண் இயந்திரங்களை ரூ.27.20 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்திலுக்கிணங்க, வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், பெருகி வரும் மக்கள் தொகையின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலும், உழவுத் தொழிலில் நிலவும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமன் செய்யும் வகையிலும் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பயன்பாடுக்கு ஏற்றவாறு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று உழவு முதல் அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் பெருமளவு வளர்ச்சி அடைந்து, இயந்திரங்களாகவும் கருவிகளாகவும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவை, காலத்துக்கேற்ப மேம்பாடு செய்யப்பட்டு வேளாண்மை தொழிலை எளிமையாக்கி லாபம் அடைய உதவுகிறது. வேளாண்மை பொறியியல் துறை விவசாயிகளுக்குத் தேவையான பலவகை வேளாண்மை இயந்திரங்களையும் கருவிகளையும் அரசு மானியத்துடன் வழங்குவதோடு மட்டுமல்லாமல் அதனை பயன்படுத்துவது குறித்த பயிற்சியும் அவ்வபோது அளிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதலும் பராமரித்தலும் என்ற தலைப்பிலான விவசாயிகளுக்கான பயிற்சி இன்று தொடங்க வைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் விவசாயிகள் தினசரி தங்களது வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சரியான முறையில் இயக்கிடவும் குறைவான செலவில் பராமரித்திடவும் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இதுபோன்ற முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு தங்களது விவசாய தொழிலினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் நடப்பாண்டில் வேளாண் இயந்திரமாக்கல் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.2.82 கோடி மதிப்பிலான 163 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ரூ.1.39 கோடி மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
என தெரிவித்தார்.
இந்த பயிற்சி முகாமில், வேளாண்மைப் பொறியியல் துறை பொறியாளர்கள் மற்றும் தனியார் துறை தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். சுமார் 110 விவசாயிகள் மற்றும் ரோவர் கல்லூரியில் பயின்று வரும் 100 மாணவர்கள் கலந்து கொண்டு தொழில்நுட்ப விபரங்களை கற்று அறிந்தனர்.
நவீன வேளாண் இயந்திரங்கள் குறித்த கண்காட்சியில் பலவகை டிராக்டர்கள், பவர் டில்லர்கள். விசை களை எடுக்கும் கருவிகள் மற்றும் ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ட்ரோன் மூலமாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்பு தொடர்பான செயல் விளக்க முறையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டறிந்து பார்வையிட்டார்.
இந்த முகாமில் களை எடுக்கும் கருவி பெற்ற திரு.மகேந்திரன் என்பவர் தெரிவித்ததாவது:
எனது பெயர் மகேந்திரன். நான் கல்பாடி கிராமத்தில் வசித்து வருகிறேன். விவசாய தொழில் செய்து எனது வாழ்க்கையை நடத்தி வருகிறேன். ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாய தொழில் செய்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே விவசாய தொழிலை திறம்பட செய்வதற்கு இயந்திரங்களும், அதற்கான உரிய பயிற்சியும் கிடைத்தால் விவசாய தொழிலை தொடர்ந்து செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்தபோது, சமூக வலைதளங்களின் மூலம் இன்று வேளாண் இயந்திரங்களின் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சி நடைபெறுவதை அறிந்து, அந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இந்த முகாமில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை சரியான முறையில் இயக்கிடவும் குறைவான செலவில் பராமரித்திடவும் செயல் விளக்கம் காட்டப்பட்டது. இது விவசாய தொழிலை லாபகரமாக செயல்படுத்த மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் எனது சொந்த தேவைக்காக களை எடுக்கும் கருவி வேண்டி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பித்திருந்தேன். எனது விண்ணப்பத்தை பரிசீலனை செய்து இன்று எனக்கு களை எடுக்கும் கருவி வழங்கி, எனது விவசாய தொழிலினை மேம்படுத்த வழிவகை செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை நானும் எனது குடும்பத்தினர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.அசோக் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை திருமதி.ராணி, உதவி செயற்பொறியாளர் திரு.சின்னசாமி, நகராட்சி துணைத்தலைவர் திரு.ஆதவன், உதவிப் பொறியாளர்கள் திரு.வீரபாண்டியன், செல்வி.அர்ச்சனா, திருமதி.ஷர்மிளா, திருமதி.ரம்யா, திருமதி சத்யா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்